திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆடிவேல் ரதம் இன்று புறக்கோட்டையை வலம் வரும்



நகரம் என்பது வான் உயர்ந்த கட்டிடங்களையும் வண்ணமயமான வர்த்தக நிலையங்களையும் அனைத்து வசதிகளையும், வளங்களையும் கொண்ட ஒரு சுறுசுறுப்பான இடமாகும். எமக்குத் தேவையான அனைத்தையும் தேவையான நேரங்களில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத் தான் இருக்கும். இது ஓர் இயந்திரமயமான வாழ்க்கையாகத் தான் இருக்கும்.

இந்த இறுக்கமான வாழ்வுக்குள்ளும் இதயத்துக்கு இதமூட்டக் கூடியவையாக விளங்குபவை ஆலய திருவிழாக்கள். அதுவும் கடந்த 137 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் கொழும்பு நகரை மண்வாசனை கமழும் அழகிய கிராமமாக மாற்றி வந்தது ஆடிவேல் விழா. கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆடி மாதத்தில் கொழும்பில் ஆடிவேல் விழா என்றால் ஒரே ஊர்த்திருவிழா வாகத்தான் இருக்கும்.

கொழும்பு முதலாம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து அல்லது செட்டியார் தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திற்கு ஸ்ரீ முருகப் பெருமானின் வேல் திருவிழாவின் தேர்த்திருவிழா சென்றடைந்து அவ் வாலயத்தில் இருக்கும் வரை ஆடிவேல் விழா பூசைகள் நடைபெறும்.

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆடிவேலின் தேர்த்திருவிழா இரவில் புறப்பட்டு ஆலயத்திற்கு திரும்பும் தினத்தன்று கொழும்பில் ஆங்காங்கே வாழ்கின்ற இந்துக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம் குடும்பமாக ஏறி ஜல் ஜல் என்று சவாரியாக பம்பலப்பிட்டி ஆலயத்திற்கு வந்து ஆடி வேல் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு மீண்டும் மாட்டு வண்டிகளில் ஏறி கொழும்பு காலிமுகத்திடலுக்கு (மிallலீ பிaணீலீ) சவாரியாக வந்து சேருவார்கள். அன்று காலி முகத்திடல் முழுவதும் மாட்டு வண்டிகளால் மட்டுமல்ல பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். காலிமுகத்திடலே ஒரு கிராமமாக உருமாறி இருக்கும்.

வேல் விழாவின் ரதபவனி மறுநாள் விடியற் காலை காலி முகத்திடலை வந்தடையும். அந்த ரத பவனி வரும் வரை மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்தவர்கள் முருகப் பெருமானை கண்டு திருவருளைப் பெற காத்திருப்பார்கள். அந்த ரதபவனியைக் கண்டபின் தான் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

அதன் பின் திருமுருகப் பெருமானின் ரதம் கொழும்பு புறக்கோட்டை எங்கும் பவனி வந்து புறப்பட்ட ஆலயத்தை சென்றடையும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை போன்று கொழும்பில் மீண்டும் ஆடிவேல் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அன்று இருந்த மாட்டு வண்டிகளை தவிர அனைத்தும் வழமை போல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நேற்று மாலை ஆடிவேல் விழா ரதம் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் காலிமுகத்திடலை வந்தடைந்தது. அங்கிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட ரத பவனி இன்று காலை முழுவதும் புறக்கோட்டை எங்கும் வலம் வந்து ஆலயத்தை அடையும்.

இன்று காலை 6 மணிக்கு காலிமுகத்திடலிலிருந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம், மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.


கே. ஈஸ்வரலிங்கம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812