புதன், 1 மே, 2019

அறநெறி அறிவு நொடி

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம

சைவ சமயிகள் யார்? உமை, விநாயகர், முருகன் ஆகிய திருவுருவங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் பொருளாகவும் வழிபாடு செய்பவர்கள்.

தீர்த்தம் எதனைக் குறிக்கும்? இறைவனுடைய திருவருளே தீர்த்தம். இது மும்மலம் நீக்கும். தீர்த்தத்தைப் பருகுவதன் வழி இறையாற்றல் நம் உடலினுள் சென்று கலக்கிறது.

சமயம் என்றால் என்ன? வழி, நெறி என்று பொருள்.

ஏன் கோயில் வாசலில் குனிந்து, படியைத் தொட்டு வணங்கி உள்ளே செல்கிறோம்? குனிந்து செல்வது பணிவைக் குறிக்கும். அப்போது நமது மனத்திலுள்ள அகங்காரமும், ஆணவமும் சற்று குறையத் தொடங்கும். எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன் கோயிலினுள் இருப்பதால்,வாயிற் படியை வணங்குகின்றோம். இறைவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நுழையக் கூடாது.

கற்பூர தீபம் எதனைக் குறிக்கிறது? ஏன் கண்களில் தொட்டு ஒற்றிக் கொள்கிறோம்? இறைவனுடைய அருள் ஒளி வடிவமாக நம்மிடம் வருவதைக் கற்பூர தீபம் குறிக்கிறது. அதனைத் தொட்டு கண்களில் ஒற்றி கொள்ளும் பொழுது, இறையாற்றல் நம் கண்களின் வழியே நம் உடலுக்குள் செல்கிறது.

இரு கைகளையும் குவித்து வணக்கம் செய்கிறோம். இதற்கு ஏதாவது தத்துவ பிண்ணனி உண்டா? சைவர்கள் / தமிழர்கள் இவ்வாறு பெரியோர்களைப் பார்த்தும் ஆலயங்களிலும் செய்வது ஏன்? ‘வணக்கம்’ கூறி ஒருவரை வணங்குதல் என்பது அவருடைய உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை வணங்குதல் ஆகும். வணக்கம் மூவகை படும் அவை வருமாறு:-
i. தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது இறைவனுக்கு மட்டுமே செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
ii. புருவ மத்தியில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது குருவிற்கு செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
iii. நெஞ்சில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் - நம் வயதை ஒத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.

சைவர்கள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் யாவை? பன்னிரு திருமுறைகள்

இறைவன் செய்த எட்டு (8) வீரச் செயல்களை என்னவென்று அழைப்போம்? அட்ட வீரட்டானம்

சிவபுராணத்தில் 'கல்லாய் மனிதராய் பேயாய்' என்று வருகிறது. புல் முதலிய பல பிறவிகள் பற்றிக் கூறும் மணிவாசகர், 'கல்லாய்' என்றும் சொல்கிறார், 'கல்' பிறப்பா? ஒவ்வொரு பிறவிகளிலும் உயிர் பல வகையான உடம்புகளைத் தமக்கு இடமாய் கொள்வது போல கல்லையும் தமக்கு இடமாய் கொள்ளும். கல் அசையாமல் கிடக்கும். அதன் உள்ளே உள்ள உயிர்களும் அசைவு இன்றிச் செயலற்றுக் கிடக்கும். இந்நிலையைக் கல்லாய் என்று மணிவாசகர் குறிக்கின்றார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812