ஞாயிறு, 15 நவம்பர், 2020

நவராத்திரி கொண்டாட்டத்தின் நோக்கம்

ஒரு மனிதனுக்கு உடல்வலிமை, பராக்கிரமம், தீர்க்காயுள், புத்திபலம், ஞானம், மனோசக்தி என்று எல்லாவித அம்சங்களும் இருந்தால் தான் வெற்றியாளராகத் திகழமுடியும். இவற்றைப் பெறவே தேவியைப் பலவிதமான வடிவங்களில் நவராத்திரி காலங்களில் பூஜிக்கிறோம். முதல் மூன்று தினங்கள் பிரதமை முதல் திரிதியை வரையில் மகேஸ்வரனிடமிருந்து தோன்றிய மகேஸ்வரி, குமரப்பெருமானிடமிருந்து தோன்றிய கவுமாரி, வராகமூர்த்தியிடமிருந்து அவதரித்த வராஹி ஆகியோரை பூஜித்து மேற்கண்ட பலன்கள் அனைத்தையும் பெறுகிறோம். வாழ்வுக்கு பொருள் அவசியம் தேவை. எனவே, நான்காம் நாளான சதுர்த்தி முதல் மூன்று நாட்கள் வாழ்வில் வளம் தரும் திருமகளை குறித்த வழிபாட்டினைத் துவங்கவேண்டும். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீதேவி, விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வைஷ்ணவிதேவி, இந்திரனிடமிருந்து தோன்றிய இந்திராணி மூவரையும் துதிக்க செல்வவளமும், பொருள்வளமும் பெற்று மகிழலாம். கடைசி மூன்று நாட்களான சப்தமி திதி முதல் நவமி திதி வரை மகா சரஸ்வதியைக் குறித்த வழிபாட்டினை செய்ய வேண்டும். நரசிம்மரின் சொரூபமாகிய நரசிம்ஹி, சண்ட முண்டர்களை வதம் செய்த சாமுண்டி, தயாளசிந்தை, ஞானம், வித்தை, கலைகளை அருளும் சரஸ்வதி தேவி ஆகியோரை வழிபாடு செய்ய ஞானம் உண்டாகும். எட்டாவது நாளே துர்க்காஷ்டமியாக மகிஷனை சம்ஹாரம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நவதேவியர் வழிபாட்டினை ஒன்பது நாட்களும் செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று தினங்களாவது வழிபாடு செய்தல் அவசியம். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்கள் இரவில் பராசக்தியை பல வடிவாகப் பூஜித்து விழா நடத்தி வருகின்றனர். முதல் மூன்று நாட்கள் மலைமகள் அல்லது பார்வதி ஆராதனை நடைபெறும். பார்வதி அருள் வடிவம்; அவள் ஞானசொரூபி, கண்ணோட்டம், ஈகை, அன்பு, ஒப்பரவு முதலியவை அமைந்தவள். இவளது நிறம் பச்சை அல்லது நீலமாகும். இது வளமையையும் செழுமையையும் குறிக்கும். அவளது அருளும் அனுக்கிரகமும் பெறும் குறிக்கோளுடனேயே நவராத்திரியில் முதல் மூன்று நாளும் பராசக்தியைப் பூஜிக்கின்றோம். லட்சுமி சிவப்பு அல்லது பொன்னிற வடிவினள். சிவப்பு நிறம் அழகு, செம்மை, தியாகம், முதலியவற்றைக் குறிக்கும். செல்வத்துக்கு லட்சுமி அதிதேவதை, ஆதலால், பொருள் வளர்ச்சி நோக்குடன் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் நவராத்திரியில் நடுநின்ற மூன்று நாட்களில் லட்சுமி தேவியை பூஜிக்கின்றனர். இறுதி மூன்று நாட்களில் கலைமகளைப் பூஜிக்கின்றனர். இவள் வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள். வெள்ளை நிறம் மாசின்மை, வாய்மை, தூய்மை முதலிய அங்குணங்களைக் குறிக்கிறது. இவள் கலைகள் அனைத்துக்கும் அதிதேவதையாவள். அவள் படிகம் போன்ற நிறத்தினள்; பவளச் செவ்வாயினள். இவையனைத்தும் பரிசுத்தத்தின் அறிகுறியாகும். ஞானவளர்ச்சியை விரும்புவோர் கலைமகள் விழாவைக் கொண்டாடுவர். புதிய கலைகளைப் பத்தாம் நாள் விஜயதசமியன்று தொடங்கிப் பயில ஆரம்பிப்பர். பள்ளிக்கு சேர்த்தல் முதல் பரமயோக ஞானக் கலைகள் வரை பயிலத் தொடங்குவது விஜயதசமி நாளேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812